Pongu Tamizh Pongu Tamizh  

என்ன செய்யப் போகிறோம்?

என்ன செய்யப் போகிறோம்?
விதுல் சிவராஜா

 

யாரறிவார் வன்னிப் பெருந்துயரை – துயர் 20

துக்கம் பல வகையில் ஏற்படுவதுண்டு. பிறருடைய கண்ணீரைக் காணும் போது ஏற்படும் துக்கத்தை தாங்கவே முடியாது. அதிலும் பசியால் வேதனைப்படும் துக்கம் சகிக்க முடியாதது. இது, பசி, ஆதரவற்ற நிலை, எதிர்காலத்தைப் பற்றிய எந்தத் தெளிவும் இல்லாத தடுமாற்றம் போன்றவற்றால் ஏற்படும் பரிதவிப்பின் விளைவான துக்கம். இதை எப்படிச் சகித்துக் கொள்ள இயலும்?

'இளமையில் வறுமை கொடுமையிலும் கொடுமை' என்று ஒளவையார் பாடியிருக்கிறார். இதை என்னுடைய வாழ்க்கையிலும் அனுபவித்திருக்கிறேன். பசியோடு பள்ளிக்குப் போகும்போது 'ஐயோ என்ரை பிள்ளையைப் பசியோட அனுப்புகிறேனே. ஒரு வேளை சாப்பாட்டைக்கூட போடமுடியாத பாவியாக இருக்கிறேனே' என்று அழுத அம்மாவை, அம்மாவின் கண்ணில் வடிந்த அந்தக் கண்ணீரை என்னால் மறக்கவே முடியவில்லை.

அதைப்போல, அதே நிலையில், அதே மாதிரிக் கண்ணீரோடு இருக்கும் சனங்களை வன்னியில் காணுகிறேன். இவர்கள் ஒருவர் இருவரல்ல. போர் தின்று தீர்த்தபின்னர் எதிர்காலத்தைப் பற்றிய எந்தத் தீர்மானங்களும் இல்லாமல், எந்தத் தீர்மானங்களையும் எடுக்கவே முடியாமல், திக்கற்றிருக்கிறார்கள். ஒரு சிறிய உதவிக்காகவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

போர் முடிந்து விட்டது. வெற்றி தோல்விக் கணக்குகளும் அந்த வெற்றி தோல்விகளின் மதிப்பீடுகளும் ஏறக்குறைய பார்க்கப்பட்டுவிட்டது. ஆனால், போரினால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி இந்த உலகம் பாராமுகமாகவே இருக்கிறது. அரசியல் நலன்களின் முன்னே – அந்த நலன்களுக்கான வியூகங்களின் முன்னே எந்தத் துயரமும் எந்தக் கோரிக்கையும் எந்த நியாயமும் செயலற்றது என்று மீண்டும் உணரப்படும் நிலைதான் தெரிகிறது.

ஆனாலும் இந்த உலகம் இன்னும் கருணையை இழக்கவில்லை. அதிகார வர்க்கத்திடம் கருணைக்கான வாசல்கள், நுண்ணுணர்கொம்புகள் இல்லாதிருக்கலாம். மக்களிடம் அது எப்போதுமுண்டு. அதனால்தான் அவர்கள் மக்களாக இருக்கிறார்கள் என்று ஒரு நண்பர் வேடிக்கையாகச் சொல்வதை இங்கே உண்மையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த உலகத்தில் கருணைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் எண்ணற்றவர்களின் கதைகளையெல்லாம் எப்படிச் சொல்லித் தீர்க்கமுடியும்? ஆனாலும் சொல்லாமலிருக்க முடியுமா?

அது ஒரு சிறிய ஓலைச் குடிசை. ஆனால், அது சரியாக வேயப்படவில்லை. இப்போதைக்கு அது சீர்ப்படுத்தப்படுவதற்கான சாத்தியங்களும் தெரியவில்லை. அதற்கருகில் இன்னொரு பத்தடிச் சதுரத்தில் அமைக்கப்பட்ட தகரத்தாலான கொட்டகை. இந்த இரண்டிலும்தான் இருக்கின்றது எட்டுப் பேர் கொண்ட ஒரு குடும்பம். எட்டுப்பேருக்கு இந்த இடம் போதவே போதாது. சமைக்கவோ படுப்பதற்கோ அங்கே வசதிகளில்லை. ஆனால் அதற்குள்தான் அவர்கள் சமைக்கிறார்கள். படுத்துக் கொள்கிறார்கள். அதற்குள்தான் அந்த வீட்டின் குழந்தைகள் விளையாடுகின்றன. யாரும் அந்த வீட்டிற்குப் போனால் அவர்களை வரவேற்று இருக்க வைப்பதற்கே அங்கே வழியில்லை.

அதைவிட, இந்த எட்டுப்பேரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னாலும், சட்டரீதியாக இவர்கள் மூன்று குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பதிவுகள் அப்படித்தான் உண்டு. அந்த மூன்று குடும்பத்திலும் செத்தவர்கள் போக இப்போது மிஞ்சியவர்கள் ஒரு குடும்பமாக – ஒன்றாக இருக்கிறார்கள். அப்படி இருப்பதே அவர்களுக்கு பாதுகாப்பும் கதியுமாகும். குழந்தைகளைத் தனியே விடமுடியுமா? அதுவும் பத்து வயதுக்குட்பட்ட சிறுபிள்ளைகளை.

இந்தக் குடும்பத்தில் எல்லோருக்கும் ஆதரவாக இப்போதிருப்பது ஒரு முதிய பெண். மூன்று பிள்ளைகளுக்கு இவர் அப்பம்மா. இரண்டு பிள்ளைகளுக்கு இவர் அம்மம்மா. மொத்தமாக அங்கே ஐந்து பேரப்பிள்ளைகள். இதைவிட ஒரு மகள். மற்றும் அந்த மகளுடைய கணவர். அவர் கூலிவேலைக்குப் போகிறார். அவருடைய வருமானத்தில்தான் இந்த எட்டுப்பேரும் தங்கியிருக்கிறார்கள். இதைவிட தாயில்லாமலும் தந்தையில்லாமலும் அந்த முதிய பெண்ணுக்கு இன்னும் பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வேறிடங்களில் இருக்கிறார்கள்.

இந்த முதிய தாயின் கணவர் நித்தியானந்தராசா எறிகணைத்தாக்குதலில் கடந்த ஆண்டு பலியாகி விட்டார். மட்டுமல்ல, மூத்த மகளும் (ஜெகலதா) வேறு இரண்டு மகன்களும் (மகேந்திரம், ஜெகராசா) ஒரு மருமகளும் (அருந்ததி) வன்னிப் போரின்போது இறந்து விட்டார்கள். ஆக, மொத்தத்தில் ஐந்து பேர் ஒரே குடும்பத்தில் கொல்லப்பட்டு விட்டனர்.

ஒரே தாக்குதலில், ஒரே நாளில், ஒரே இடத்தில் இவர்கள் இறக்கவில்லை. வெவ்வேறு சம்பவங்களில் வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு இடங்களில் இவர்கள் இறந்திருக்கின்றனர். தங்களால் முடிந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருந்தபோதும் சாவிலிருந்து அவர்களால், தப்பமுடியவில்லை.

கணவரை இழந்த இராசலட்சுமிக்கு இப்போது வயது 62. ஆனால் எண்பது வயதுக்காரியைப் போல மூப்படைந்திருக்கிறார். இந்தச் சாவுகளும் அகதி வாழ்க்கையின் அவலங்களும் இந்த மனுசியைச் சப்பித்துப்பியிருக்கின்றன. கவலை படிந்த முகம். ஒளியிழந்த கண்கள். யாரையாவது கண்டால், அவரையறியாமலே வானத்தைப் பார்த்தவாறு ஏந்தும் கைகள். உண்மையில் அவை வானத்தைப் பார்த்து ஏந்தவில்லை, நம்மைப் பார்த்தே ஏங்குகின்றன.

இவருடைய பராமரிப்பில்தான் இறந்த மகன்களில் ஒருவருடைய (ஜெகராசாவின்) மூன்று பிள்ளைகளும் இருக்கின்றன. இந்த மகனும் மனைவியும் (அருந்ததியும்) இறந்ததால் தாயும் தகப்பனும் இல்லாமல் மூன்று பிள்ளைகள் இருக்கின்றன.

மூத்தபிள்ளைக்கு வயது 10. பெண். கலைமகள். இந்தக் கலைமகள் இப்போது கிளிநொச்சியில் இருக்கும் கனகபுரம் மகாவித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டில் படித்துக்கொண்டிருக்கிறார். அடுத்த பிள்ளை ஆண். வயது 08. அதற்கடுத்தவர் 03 வயதுடைய அனஞ்சயன்.

இந்த மூன்றுபேரும் தங்கள் பாட்டி இராசலட்சுமியுடன் இருக்கிறார்கள். இராசலட்சுமிக்கு வீடில்லை. இப்போதிருக்கும் இந்தப் பத்துக்குப் பத்து தகரக்கொட்டகையை படையினர்தான் போட்டுக்குடுத்திருக்கிறார்கள். வருமானமும் இல்லை. ஆறுமாத அடிப்படையில் கொடுக்கப்பட்ட உலக உணவுத்திட்ட நிவாரணமும் முடிந்து விட்டது. அந்த நிவாரணத்தைத் தவிர, வேறு எந்த உதவிகளும் கிடையாது. இந்த நிவாரணம் கிடைத்தபோது, சாப்பாட்டுக்கு அவ்வளவு பிரச்சினை இருக்கவில்லை.

இப்பொழுது நிவாரணம் நிறுத்தப்பட்டிருப்பதால், சாப்பாட்டுக்கே கஸ்ரம். அதைவிட, செலவுக்குக் காசில்லை. அதனால், 'பிள்ளையளுக்குத் தேவையான எதையும் வாங்கிக் குடுக்க முடியேல்லை' என்று இராசலட்சுமி சொல்லி அழுகிறார். 'பாத்தியளா எங்கட நிலைமையை?' என்று கண்ணீர் விடுகிறார்.

இந்த மூன்று பிள்ளைகளின் தந்தை - இராசலட்சுமியின் இரண்டாவது மகன் ஜெகராசா முன்னர் கிளிநொச்சியில் ஒளிப்படப்பிடிப்பாளராக இருந்தார். ஒரு ஸ்ரூடியோவையும் வைத்திருந்தார். நல்லாகச் சம்பாதித்தார். எல்லோரையும் வடிவாகப் பார்த்தார். அவர்கள் சந்தோசமாக இருந்தனர்.

2008 இல் நடந்த இடப்பெயர்வு ஒரு சுனாமியைப்போல, ஒரு வெள்ளப்பெருக்கைப்போல மகிழ்ச்சி, நிம்மதி, ஆறுதல் என எல்லாவற்றையும் அடித்துச் சென்று விட்டது. இப்பொழுது மிஞ்சியிருப்பது, துக்கம். பசி, பட்டினி. ஏக்கம்... இவை மட்டும்தான். மேலும் என்ன செய்வதென்று தெரியாத நிலை.

இந்த மூன்று பிள்ளைகளையும் இராசலட்சுமியின் வேறு பிள்ளைகள் பார்க்கலாம் என்றால், அதற்கும் முன்னரே சொல்லப்பட்டிருப்பதைப் போல இரண்டு பேர் கொல்லப்பட்டு விட்டார்கள். மிஞ்சியிருப்பது ஒரு மகள் ஜெகசுதா மட்டுந்தான்.

ஜெகசுதா இரண்டு பிள்ளைகளுடன் இருக்கிறார். ஆனால் ஒன்று, அண்ணனுடைய இந்தப் பிள்ளைகளுடனும் இராசலட்சுமியுடனும் சேர்ந்திருக்கிறார். சேர்ந்திருந்தாலும் உதவியோ வருமானமோ இல்லாத நிலை. தொழில் இல்லை. ஒரு முன்பள்ளியில் படிப்பித்திருக்கிறார். ஒரு மாதம் மட்டும் இரண்டாயிரம் ரூபாய் கிடைத்திருக்கிறது. பிறகு எதுவும் இல்லை. கணவருடைய கூலி உழைப்பில் தன்னுடைய குடும்பத்தைப் பார்க்கவே வழியில்லை. என்றாலும் விட்டுவிட முடியுமா? கஞ்சியானாலும் சேர்ந்து குடிப்போம் என்று, எட்டுப்பேரும் ஒன்றாக இருக்கின்றனர்.

எதைப்பற்றியாவது கேட்டால் இவர்களுக்கு அழுகைதான் வருகிறது. இறந்த உறவுகளைப் பற்றிச் சொல்லி அழுகிறார்கள். தங்களுடைய கடந்த காலத்தின் வாழ்க்கை தொலைந்து போய்விட்டதே என்று சொல்லி அழுகிறார்கள். ஒரு தந்தையைப் போல பொறுப்போடு உழைத்து, சகோதரிகளுக்கு சீதனம் தன்னுடைய குடும்பத்தையும் நல்லமாதிரிப் பார்த்துக் கொண்ட ஜெகராசாவைப் பற்றிச் சொல்லி அழுகிறார்கள்.

அந்த ஜெகராசாவின் பிள்ளைகள் இப்போது இப்படி தாயும் தகப்பனும் இல்லாமல் அநாதைகளாகி இருப்பதைச் சொல்லி அழுகிறார்கள். இதைவிட தங்களுடைய குடும்பத்தில் இத்தனை சாவுகள் ஏற்பட்டிருக்கிறதே என்று சொல்லி அழுகிறார்கள். சொந்த வீட்டுக்கு வந்தபிறகும், சாப்பாட்டுக்கே கையேந்த வேண்டிய நிலையில் இருப்பதைச் சொல்லி அழுகிறார்கள்.

இவர்களுக்கு என்ன பதிலைச் சொல்ல முடியும்? எந்த ஆறுதலைக் கொடுக்க முடியும்? அதை எப்படிக் கொடுப்பது?

'காயங்களுடன் தப்பிய பிள்ளையளை எப்பிடியோ காப்பாத்தி விட்டோம். ஆனால், இதுகளை வளர்த்தெடுக்கவேணுமே' என்கிறார் ஜெகசுதா. ஜெகசுதாவுக்கு இப்பொழுது வயது 28. படித்திருக்கிறார். ஆனால், வேலைவாய்ப்பில்லை. ஏதாவது ஒரு தொழிலைச் செய்ய உதவி கிடைத்தால் அதை வைத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்றால், அதற்கும் வழி வேணுமே என்று யோசிக்கிறார்கள்.

போர் இவர்களைச் சிதைத்து விட்டது. இவர்களின் ஆதாரங்களையும் சிதைத்துவிட்டது. ஆனால், இவர்கள் போரை விரும்பியதும் இல்லை. போரை ஆதரித்ததும் இல்லை. என்றாலும் போர் என்று வந்து விட்டால் அதிலிருந்து எவரும் எதுவும் தப்பிவிடமுடியாது. அதற்கு வன்னியைப் பார்த்தாலே புரியும்.

ஐந்து பேரை இழந்தபின், போருக்குப் பின்னரான கிளிநொச்சி - திருநகரில் மீளக் குடியேறி இருக்கும் இந்தக் குடும்பத்துக்கு இப்போது தேவை பெரும் உதவி. இந்த எட்டுப் பேரையும் விட, இராசலட்சுமியின் ஒரு மகனான மகேந்திரத்தின் பிள்ளைகளும் உதவியில்லாமல், பெருஙகஸ்ரங்களின் மத்தியில்தான் இருக்கின்றனர். அதைப்போலவே மகள் ஜெகலதாவின் பிள்ளைகளும் தாயில்லாமல், வீடில்லாமல், உழைப்பில்லாத தந்தையுடன், இருக்கின்றன.

ஆகவே இந்தக் குடும்பத்துக்கு இப்பொழுது தேவை ஏதாவது உதவி. அதை எதிர்பார்த்தே இவர்கள் இருக்கின்றனர். இவர்களைப் போலவே வன்னியில் ஏராளம் சனங்கள் இருக்கின்றன. ஏராளம் குடும்பங்கள் இருக்கின்றன.

நேற்றும் இவர்களிடம் நண்பர் ஒருவர் போயிருக்கிறார். அவரைக் கண்டதும் அழத் தொடங்கிவிட்டார்கள். அவரை மட்டுமல்ல, யாரைக் கண்டாலும் இவர்கள் அழுகின்றனர். அப்படியொரு நிலையில், இவர்கள் இருக்கின்றனர். அப்படியொரு விதி இவர்களின் வாழ்வில் வந்து விழுந்திருக்கிறது.

இப்படி, இந்த விதியிலிருந்து, இந்தத் துயரத்திலிருந்து மீண்டால்தான் ஒரு புதிய வாழ்க்கையைப் பற்றி, புதிய விடுதலையைப் பற்றிச் சிந்திக்கலாம். கவிஞர் வில்வரெத்தினம் சொன்ன ஒரு விசயமே இப்போது என்னுடைய நினைவுக்கு வருகிறது.

ஆரோக்கியமான சமூகத்தினால்தான் விடுதலையைப் பெறமுடியும். அது ஆரோக்கியமான சிந்தனையிலிருந்து, உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், பொருளாதார ஆரோக்கியம்... என விரிவான பல ஆரோக்கியங்களைக் கொண்டது. ஆகவே முதலில் இதைச் செய்ய வேணும்.

இந்த உதவிகளுக்கு நாம் வெளிச் சக்திகளை நம்பியிருப்பதோ, சர்வதேச தொண்டு நிறுவனங்களிடம் மக்களைக் கையளிப்தோ பொருத்தமானதல்ல. அவை செய்கின்ற பணிகள் ஆரோக்கியமானவையுமல்ல.

00

பொங்குதமிழில் வெளியான 'ஒரு துக்கக்குறிப்பில்' உதவி வேண்டி நிற்கும் இரு குடும்பங்கள் பற்றி எழுதியிருந்தோம்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்தப் பிள்ளைகளுக்கு உதவ முன்வந்த அனைத்து வாசகர்களுக்கும் முதலில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பூநகரி, வலைப்பாட்டைச் சேர்ந்த இந்தக் குடும்பத்துடனான நேரடித் தொடர்புகளை தற்போது ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

தற்போது இன்னொரு குடும்பத்தின் துயரையும் இங்கே பதிவு செய்துள்ளோம். இந்த பதிவில் எழுதப்பட்டுள்ளதைப் போன்று, இந்த உலகத்தில் கருணைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் எண்ணற்றவர்களின் கதைகளையெல்லாம் எப்படிச் சொல்லித் தீர்க்கமுடியும்? ஆனாலும் சொல்லாமலிருக்க முடியுமா?

எனவே கருணை உள்ளம் கொண்ட வாசகர்களே!

உங்களால் முடிந்தளவு இந்த உறவுகளுக்கு கை கொடுங்கள். இந்தக் குடும்பத்துடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தித் தர தயாராக உள்ளோம் என்பதை மீண்டும் அறியத் தருகிறேன்!

-ஆசிரியர்

7/14/2010 11:29:51 AM

உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

 
புதினங்கள்
செய்திகள்